நமது டெஸ்ட் கிரிக்கெட் அணி - ஒரு கண்ணோட்டம்
நமது கிரிக்கெட் அணியின் (சச்சின் இல்லாத) நிலமை, அதுவும் ஆஸ்திரேலியா உடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தோல்வி அடைந்த நிலையில், மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது. இதற்கு முன்னால் நடந்த ஆசியக் கோப்பை, Videocon Cup, Natwest Challenge மற்றும் ICC champions Trophy தொடர்களிலும், நமது வெற்றி சதவிகிதமும் குறைவே, அதாவது 39%.
அப்படியிருந்தும், அதே அணியே திரும்ப திரும்ப களமிறங்கி, தோற்று நம்மை வெறுப்பேற்றுவது வாடிக்கையாகி விட்டது! அணி வீரர்களுக்கென்ன, தோற்றாலும் ஜெயித்தாலும், அதிகமாகவே 'துட்டு' கிடைத்து விடுகிறது! ரசிகர்களாகிய நாம் தான், நேரத்தையும், பணத்தையும், சக்தியையும் விரயம் செய்து கொண்டிருக்கிறோம்! நாம் அவர்கள் மீதுள்ள நம்பிக்கையை என்றும் இழப்பதே இல்லை!!!
இப்போது கூட பாருங்கள், நேற்று கும்ப்ளே 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியதால், இன்று சேவாக் 150+ ரன்கள் குவித்ததால், நமது வெற்றிக் கனவு இன்று துளிர்த்து நாளை விருட்சமாகி விடும் !!! நாம் திருந்துவது கடினமே. இந்த ஆட்டத்தில் நாம் வென்றாலும், அதற்கு கும்ப்ளேவும் சேவாக்-கும் மட்டுமே காரணமாக இருக்க முடியும். TEAM EFFORT என்று கூற இயலாது. தற்போதுள்ள அணியில் மாற்றங்கள் அவசியம் எனத் தோன்றுகிறது.
முக்கியமாக, சமீபத்து தொடர் தோல்விகளுக்கு, கங்குலி பொறுப்பேற்று, captain பதவியிலிருந்து விலகுவது தான் அவருக்கு அழகு. அணியில் உள்ள சில ஆட்டகாரர்களிடத்தில் கங்குலிக்கு இருக்கும் நம்பிக்கையும் விசுவாசமும், வரைமுறை தாண்டி போய் விட்டது. லஷ்மண் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் அடித்த 281-க்கு பிறகு உருப்படியாக எதுவும் செய்ததாக நினைவில்லை!
கங்குலிக்கு பிடித்த யுவரஜிடம் எவ்வளவு திறமை உள்ளதோ, அதை விட ஆணவம் அதிகம். யுவராஜ் தன்னை மட்டை அடிப்பதில் விவியன் ரிச்சர்ட்ஸ் என்றும், பந்து தடுப்பதில் ஜான்டி ரோட்ஸ் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்!? நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கிறது! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்க்ஸிலும், நமது அணி இருந்த நெருக்கடியான நிலமையை சற்றும் உணராமல், ஒரே
மாதிரியான இரு மோசமான ஷாட்டுகளுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
யுவராஜை துவக்க ஆட்டக்காரர் ஆக்கியே தீருவேன் என்று அடம் பிடித்த கங்குலியின் அடாவடித்தனம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதனால் சோப்ராவின் தன்னம்பிக்கை தரை மட்டமானது தான் மிச்சம்! ஆஸ்திரேலிய குதி-வேகக் (bouncy and fast!) களங்களிலேயே அருமையாக ஆடிய அவர், இப்போது பெங்களூரின் தட்டையான
களத்திலேயே சொதப்பினார்.
இதை விட அக்கிரமமான விஷயம் ஒன்று உண்டென்றால், அது, முதல் டெஸ்டில் 2-வது இன்னிங்க்ஸில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஆடி ஆட்டத்தை எப்படியாவது 'டிரா' செய்ய வேண்டிய சூழ்நிலையில் நாம் இருந்தபோது, கங்குலி இல்லாத ரன்னுக்கு முட்டாள்தனமாக ஓடி, ரன்அவுட் ஆனது தான்! கங்குலியை டெஸ்ட் அணியிலிருந்து நீக்கி விட்டு, திராவிட்டை கேப்டன் ஆக்கினால் தான், நமக்கு விடிவு காலம் பிறக்கும் (சென்னை டெஸ்டில் இந்தியா வென்றாலும் கூட!).
அத்துடன் நில்லாமல், அணிக்கும் சற்று புது ரத்தம் பாய்ச்சுதல் நலம். அதற்கு, யுவராஜ், லஷ்மண், பார்த்திவ் படேல் போன்றோரை சிறிது காலம் அணியிலிருந்து விலக்கி வைக்கலாம். அவர்களுக்கு பதிலாக வரப்போகிறவர்கள் அவர்களை விட மோசமாக விளையாடுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவே! அணிக்கு பலம் சேர்க்க மொஹமத் கெய்·வ், தினேஷ் கார்த்திக், ஹேமங்க் பதானி மற்றும் பல இளம் வீரர்கள் தயாராகவே உள்ளனர். நமது ஜாம்பவான் தெண்டுல்கரும் விரைவில் அணியில் சேர்ந்து விட்டால் நல்லது.
